முழு இந்தியாவும் உன்னை நம்புகிறது என பயிற்சியாளர் கம்பீர் கூறிய வார்த்தையை திலக் வர்மா நினைவு கூர்ந்தார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், முழு இந்தியாவும் உன்னை நம்புகிறது என பயிற்சியாளர் கம்பீர் கூறிய வார்த்தையை திலக் வர்மா நினைவு கூர்ந்தார்.
இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு திலக் வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
முழு இந்தியாவும் உன்னை நம்புகிறது. நீ கடைசி வரை களத்தில் இருந்தால் போட்டியை வெற்றிபெறச் செய்யலாம் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் சிதான்ஷு கோடாக் ஆகியோர் என்னிடம் கூறினர். அதை மட்டுமே மனதில் கொண்டு போட்டியை முடிந்தவரை ஆழமாகக் கொண்டு செல்ல திட்டமிட்டேன்.
அனைவரின் நம்பிக்கையையும் பூர்த்தி செய்து போட்டியை முடித்துக் கொடுத்ததில் பெருமை அடைகிறேன்.
மிட்செல் சான்ட்னரின் கடைசி ஓவரில் நமன் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் 18-வது ஓவரிலேயே போட்டியை முடித்திருக்க முடியும். நமன் பேட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியது. இறுதியில் ஐதராபாத்தைச் சேர்ந்த நிதிஷ் ரெட்டியும் தானும் இணைந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்தோம்.
பந்துகள் தங்களுக்குச் சாதகமான இடத்தில் வரும்போது மட்டுமே அடித்து ஆட முடிவு எடுத்தோம். மற்ற நேத்தில், பந்தை தட்டிவிட்டு வேகமாக ஓடி ரன் சேர்த்தோம். இந்தப் பெரிய மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்தி சிக்சர்களை அடிக்க முடியும் என்பதால் அதற்காகக் காத்திருந்து போட்டியைச் சிறப்பாக முடித்தோம் என தெரிவித்தார்.