தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.
குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது.
Temba Bavuma held the cup like he was holding every insult ever thrown at him and South Africa cricket team. Redemption looks good on him. Congratulations SA Cricket. #WtcFinal2025 #AUSvsSA pic.twitter.com/rHNNGYjltS