சையத் அலி முஷ்டாக் அலி கோப்பைக்கான 2-வது போட்டியில் தமிழ்நாடு அணி ஜம்மு-காஷ்மீரை எதிர்கொண்டது. இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜம்மு-காஷ்மீர் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் கம்ரான் இக்பால் 37 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷுபம் கஜுரியா 34 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் சேர்த்தார். தமிழ்நாடு அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களம் இறங்கியது. அமித் சாத்விக், துஷர் ராஹேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரஹேஜா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் அனார்.
அடுத்து பி.சச்சின் களம் இறங்கினார். அமித் ஷாத்விக் 31 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் விளாசினார். சச்சின் 29 ரன்களில் ஆட்டமிழக்க, என். ஜெகதீசன் 20 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 13 ரன்கள் எடுத்த தமிழ்நாடு 1 விக்கெட்டை இழந்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தமிழ்நாடு 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு அணி 6 ரன்களில் தோல்வியை சந்தித்தது.
முதல் போட்டியில் ரெயில்வேஸ் அணிக்கெதிராக 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தமிழ்நாடு 172 ரன்கள் சேர்த்தது. ரெயில்வேஸ் 166 ரன்கள் அடித்து தோல்வியைத் தழுவியது.