இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியில் மானவ் சுதர் என்ற சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அறிமுகம் ஆனார். இவர் பேட்டிங்கில் 41 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். 5 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இந்த நிலையில் மானவ் சுதரை கவாஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். மானவ் சுதர் குறித்து கவாஸ்கர் கூறியதாவது:
மானவ் சுதரின் பந்துவீச்சு மட்டுமல்ல பேட்டிங்கில் அவர் காட்டிய நம்பிக்கையும், குறிப்பாக அவர் தனது கால்களைப் பயன்படுத்திய விதமும், கிரீஸில் அவர் சௌகரியமாக நின்ற விதமும் தனித்து நின்றன
பந்துவீச்சில் அவர் மிகவும் துல்லியமாக இருந்தார் மற்றும் பேட்ஸ்மேன்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். ஆடுகளத்தில் இருந்து ஓரளவு உதவி கிடைத்தது. அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளருக்கும் உண்மையான சோதனை பிளாட் பிட்சிகளில் இருக்கிறது. அங்கு அதிக வெரைட்டி, சூழ்நிலைக்கேற்ப மாறும் திறனும் தேவைப்படுகின்றன.
இருப்பினும் இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு அறிமுக ஆட்டமாகும். மேலும் அவர் டெஸ்ட் மட்டத்தில் ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுப்பதற்கான பண்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.