இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டியிலும், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டியிலும் விளையாடுகிறது.
இதேபோல செப்டம்பர் மாதம் ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெறுகிறது. இந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய அணி வரும் 6-ம் தேதி அறிவிக்கப் படுகிறது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் கூடி டி20 போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்கிறது.
டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். அவர் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் நடந்த டி20 உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். சமீபகாலமாக அவரது பேட்டிங் மோசமாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் அவர் 13 ஆட்டத்தில் 270 ரன்களே எடுத்தார்.
இதனால் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்படுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக யார் தேர்வு செய்யப்படுவார்? என எதிர்பார்க்கப் படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர், திலக் வர்மா ஆகியோரில் ஒருவர் கேப்டனாக வாய்ப்பு இருக்கிறது. இதில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் மீது தேர்வுக்குழு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனை கேப்டன் ஆக நியமிக்க காம்பீர் விரும்புகிறார். ஆனால் தேர்வுக்குழு அதை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஷான்கிஷன் நீண்ட காலத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என தேர்வுக்குழு கருதுகிறது. இதனால் அவரும் கேப்டன் பதவிக்கான வாய்ப்பில் இருக்கிறார்.
2028-ம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு கேப்டனை தேர்வுசெய்ய வேண்டும் என்பதில் தேர்வுக்குழு உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.