முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்னில் சுருண்டது.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
லாகூரில் இன்று நடந்த 5-வது லீக் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 27 ரன் எடுத்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 5 விக்கெட்டும், சஹன் ஆராச்சிகே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.