முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்திய இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
லாகூரில் இன்று நடந்த 5-வது லீக் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. அதிகமாக பாபர் அசாம் 27 ரன் எடுத்தார்.
இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 5 விக்கெட்டும், சஹன் ஆராச்சிகே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த நிலையில் அவிஷ்கா பெர்னாண்டோ 16 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 8 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இலங்கை அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.
கமிந்து மெண்டிஸ் 62 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள 6வது லீக் தொடரில் இலங்கை அணி, இங்கிலாந்துடன் மோதுகிறது.
வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியுடன் மோதவுள்ளது.