கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

சரித் அசலங்கா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் செப்டம்பர் 15-ம் தேதியும், ஒருநாள் தொடர் செப்டம்பர் 22-ம் தேதியும் தொடங்குகிறது.

இலங்கை அணி அறிவிப்பு

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

குசால் மெண்டிஸ்

டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டு தொடர்களிலுமே குசால் மெண்டிஸ் கேப்டனாக வழிநடத்துகிறார். சரித் அசலங்கா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சரித் அசலங்கா டி20 போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெறவில்லை. அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களுக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் 11 போட்டிகளில் 385 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இலங்கை அணி விவரம் (ஒருநாள் தொடர்)

குசால் மெண்டிஸ் (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷ்ரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (துணை கேப்டன்), ஜனித் லியாநகே, பவன் ரத்நாயகே, தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மஹேஷ் தீக்‌ஷனா, சச்சிந்து கொலம்பேஜ், துஷ்மந்தா சமீரா, ஈஷான் மலிங்கா, அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா.

இலங்கை அணி விவரம் (டி20 தொடர்)

குசால் மெண்டிஸ் (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷ்ரா, லஹிரு உதாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (துணை கேப்டன்), ஜனித் லியாநகே, தசுன் ஷனகா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹேஷ் தீக்‌ஷனா, தரிந்து ரத்நாயகே, துஷ்மந்தா சமீரா, ஈஷான் மலிங்கா, நுவான் துஷாரா, பினுரா பெர்னாண்டோ.