வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 549 ரன்கள் குவித்தது.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் இலங்கை அணி களமிறங்கியது. நிஷான் மதுஷ்கா, லஹிரு உதரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
3-வது விக்கெட்டுக்கு நிஷான் மதுஷ்கா உடன் கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆடியது. லஹிரு உதரா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இது அவரின் 3-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கமிந்து மெண்டிஸ் அரைசதம் அடித்து, 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லஹிரு உதரா, 248 பந்துகளை சந்தித்து 188 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர், 21 பவுண்டரிகளும் அடங்கும். கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பொறுப்புடன் ஆடிய குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா இருவரும் அரை சதம் கடந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா ஜோடி 143 ரன்கள் சேர்த்த நிலையில் குசால் மெண்டிஸ் 69 ரன்னில் அவுட்டானார்.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோனல் தினுஷா 92 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 549 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷமார் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும், அல்சாரி ஜோசப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், காவேம் ஹோட்ஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.