கிரிக்கெட்

துலீப் டிராபி: சதத்தை தவறவிட்ட திலக்வர்மா: தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு ஆல் அவுட்

கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இஷான் கிஷான் இரட்டை சதம்

அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார்.

தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.

கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன் எடுத்திருந்தது. திலக் வர்மா 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சதத்தை தவறவிட்ட திலக் வர்மா

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. திலக் வர்மா பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார்.

372 ரன் முன்னிலை

இறுதியில், தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டல அணியை விட 372 ரன்கள் பின் தங்கியுள்ளது தெற்கு மண்டல அணி.

கிழக்கு மண்டல அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டும், ஷமி, குரேஷி, ஷிகர் மோகன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்ஸ் ஆடி வருகிறது.

SCROLL FOR NEXT