தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி, முதலில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. டெம்பா பவுமா 30 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 27 ரன்னும் எடுத்தனர். அந்த அணியின் மேத்யூ பிரீட்ஸ்கி அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். பிரீட்ஸ்கி-யான்சென் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூ பிரீட்ஸ்கி 112 ரன்னில் அவுட்டானார்.
மார்கோ யான்சென் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதம் கடந்தார். அவர் 59 பந்தில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 60 ரன்களை விளாச, டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு களமிறங்கிய கூப்பர் கனொலி 42 பந்துகளில் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்லிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். மேட் ரென்ஷா 44 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் மிட்செல் ஸ்டார்க் மட்டும் 16 என இரட்டை இலக்க ரன்களை எடுத்த நிலையில், மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி 41.2 ஓவர்களில் வெறும் 230 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், கார்பின் போஷ் மற்றும் ஃபோர்டுயின் தலா 2 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் மற்றும் ஜெரால்ட் கோட்ஸீ தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.