கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்த நமீபியா

இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன.

நமீபியா அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி போராடி வென்றது.

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

முதல் லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை நமீபியாவும், 2வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை தென் ஆப்பிரிக்காவும் வீழ்த்தியது. 3-வது லீக் ஆட்டத்தில் நமீபியாவை ஜிம்பாப்வே அணியும் வீழ்த்தின.

4வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை தென் ஆப்பிரிக்கா அணியும், 5வது லீக் ஆட்டத்தில் நமீபியாவை ஜிம்பாப்வே அணியும் வீழ்த்தியது.

நமீபியா-தென் ஆப்பிரிக்கா

இந்நிலையில், நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பிரிடோரியஸ் 53 பந்தில் சதமடித்து 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கனூர் எஸ்டர்ஹுய்சென் 40 பந்தில் 88 ரன் குவித்தார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது.

நமீபியா சார்பில் ஜேன் பால்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ஜான் பிரைலிங்க் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 72 ரன்கள் குவித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லூரன் ஸ்டீன்காம்ப் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 66 ரன்னில் ரிடயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இறுதியில், நமீபியா அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT