வங்கதேசத்துக்கு எதிரான 2வது போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்குப் பிறகே போட்டிஆட்டம் தாமதமானது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 33.3 ஓவரில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மஹிஜுல் இஸ்லாம் 23 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென், ககிசோ ரபாடா தலா 3 விக்கெட்டும், ஆன்ரிச் நூர்ஜே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 115 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 494 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சிறப்பாக ஆடிய ஆக்கர்மேன் சதமடித்து 150 ரன்னில் வெளியேறினார். வியான் முல்டர் பொறுப்புடன் ஆடி சதமடித்து 100 ரன்னில் ஆட்டமிழந்தார். டோனி டி ஜோர்சி அரை சதம் கடந்து 66 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய மார்கோ யான்சென் அரைசதம் கடந்து 67 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், காலித் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. 403 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.
அதிகபட்சமாக தவ்ஹித் ஹிருடோய் 41 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த நிலையில் தன்ஜித் ஹசன் 29 ரன்னில் அவுட்டானார். மஹிஜுல் இஸ்லாம் 38 ரன்னும், நஜ்மல் ஹொசைன் ஷாண்டோ 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.
4வது விக்கெட்டுக்கு ஷாண்டோ-தவ்ஹித் ஹிருடோய் ஜோடி 50 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் 49.4 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் வியான் முல்டர் 7 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது வியான் முல்டருக்கும், தொடர் நாயகன் விருது ஆக்கர்மேனுக்கும் அளிக்கப்பட்டது.