கிரிக்கெட்

ஜோகனஸ்பெர்க் டெஸ்ட்: வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஹிருதோய், லிட்டன் தாஸ் சதம்

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 101.2 ஓவரில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தவ்ஹித் ஹிருதோய்-லிட்டன் தாஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி சரிவை நோக்கிச் சென்ற அணியை போராடி மீட்டது.

6-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் தவ்ஹித் ஹிருதோய் 137 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் சதமடித்து 120 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், டேன் பீட்டர்சன் 4 விக்கெட்டும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சதமடித்த ஆக்கர்மேன், ரிக்கல்டன்

இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிறப்பாக ஆடிய ஆக்கர்மேன் 157 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 102 ரன்னும் எடுத்தனர். ஜுபைர் ஹம்சா 83 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரபாடா அரை சதம் கடந்து 72 ரன்னில் அவுட்டானார். டெம்பா பவுமா அரை சதம் கடந்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும், எப்டாட் ஹொசைன், மொமினுல் ஹக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

வங்கதேசம் திணறல்

157 ரன்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேசம் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 39 ரன்னும், மஹிஜுல் இஸ்லாம் 32 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், வங்கதேசம் அணி 2வது இன்னிங்சில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் சைமன் ஹார்பர் 6 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் ரபாடா

12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ரபாடாவுக்கு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT