கிரிக்கெட்

தொடக்க ஆட்டக்காரர் யார் ஜெய்ஸ்வாலா, ரோகித் சர்மாவா?: சுப்மன் கில் விளக்கம்

இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி சதமடித்து 110 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கான தொடக்க ஆட்டக்காரராக உங்களுடன் களமிறங்குவது யார் ரோகித் சர்மாவா, ஜெய்ஸ்வாலா என சுப்மன் கில்லிடம் கேள்வி எழுப்பினர். அப்போது கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:

அனைத்து வீரர்களும் சிறப்பாகச் செயல்படும்போது இதுபோன்ற ஒரு ஆரோக்கியமான தேர்வுக் குழப்பம் ஏற்படுவது நல்லதுதான்.

நாளை அல்லது அடுத்த இரண்டு நாட்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்படும். அதன்பிறகு, அணி வீரர்களின் பட்டியலைப் பார்த்துவிட்டு இங்கிலாந்து மண்ணில் களமிறங்குவதற்கான சிறந்த லெவன் அணியைத் தேர்வு செய்வோம்.

அனைவரின் உடற்தகுதியும் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். அனைவரும் உடற்தகுதியுடன் இருந்தால் அதன் அடிப்படையில் சிறந்த பிளேயிங் லெவன் அணியை உருவாக்குவோம்.

இந்தத் தொடரில் விராட் பாய் விளையாடாததால் ஜெய்ஸ்வாலுக்கு சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய போட்டியிலும் அவர் மிக அற்புதமாக விளையாடினார். அவர் இதே ஃபார்மைத் தொடர்ந்து, தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இங்கிலாந்தில் நிலவும் சூழல் தென் ஆப்பிரிக்காவில் நாம் எதிர்கொள்ளும் சூழலுக்கு சற்றே நெருக்கமாக இருக்கும். அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதியுடன் களமிறங்கினால் அது ஒரு சிறந்த தொடராக அமையும் என தெரிவித்தார்.