ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 25 ஓவராகக் குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 24.5 ஓவரில் 194 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர் ரகுமத்துல்லா குர்பாஸ் சதம் அடித்தார். அவர் 51 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்சருடன் 102 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்பின் ஆடிய இந்திய அணி 22.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் சுப்மன் கில் 66 பந்தில் 84 ரன்னும், கே.எல்.ராகுல் 19 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன்கில் கூறியதாவது:
இது ஒரு டி20 போட்டி போல இருந்தது. நாங்கள் மிக சிறப்பாக பந்து வீசினோம்.
அறிமுக வீரர்களான குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே ஆகிய இருவரும் நேர்த்தியாக பந்தை வீசினார்கள். அவர்கள் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது.
குர்னூரின் வேகம், நேர்த்தியான பந்துவீச்சு, ஸ்விங் ஆகியவை ஈர்க்கக் கூடியதாக இருந்தது.
ஹர்ஷ் துபே முதல் ஓவரிலேயே 16 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன்பின் அவர் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்கள் முக்கியமானது. நாங்கள் இந்த ஓவர்களில் அழுத்தத்தைக் கொடுத்தோம் என தெரிவித்தார்.