கிரிக்கெட்

சூர்யவன்ஷி இன்னும் காத்திருக்க வேண்டும்: கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைக்காததால் கவலைப்படாமல் காத்திருக்க வேண்டும் என இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

மழையால் ரத்து

பெங்களூருவில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மழையால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதனால் 9 ஓவராகக் குறைக்கப்பட்டது.

முதலில் விளையாடிய இந்திய அணி 7.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன் எடுத்து இருந்தபோது மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போட்டியை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

காத்திருக்க வேண்டும்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால், பயிற்சியாளர் காம்பீர் மற்றும் அணி நிர்வாகத்தினர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைக்காததால் கவலைப்படாமல் காத்திருக்க வேண்டும் என கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஷ்ரேயஸ் அய்யர் பேட்டியில் கூறியதாவது:

நான் அவரிடம் (வைபவ் சூர்யவன்ஷி) தொடர்ந்து சொல்வது இதுதான். உங்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் வரும். செயல் முறையில் சீராக இருந்து, மனதை எளிதாக வைத்துக்கொண்டு, வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று அதிகம் சிந்திக்காமல் இருந்தால் போதும். சில சமயங்களில் நீங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

அணியில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இருவர் (அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்) உள்ளனர், அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

பந்துவீச்சில் சவால்

2-வது, 4-வது போட்டிகளில் நாங்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தால் தொடரின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம். பந்துவீச்சில் சவால் இருந்தது. அதே நேரத்தில் பேட்டிங் மிகச் சிறப்பாக அமைந்தது.

ஆனால் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நாங்கள் பின்தங்கி விட்டோம். வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக பேட்டிங் செய்தது. ஷாய் ஹோப் மிக சிறப்பாக விளையாடினார். ஒரு தோல்விக்கு பிறகும் மீண்டும் எழுந்து வரும் திறன், அணியின் மிகப் பெரிய சாதகமான அம்சங்களில் ஒன்றாகும்.

நல்ல பாடம்

எங்களால் தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இது ஒரு நல்ல பாடமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் கூட நாங்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் அபாரமாக இருந்தது. இனி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள தொடர் சவாலானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சூர்யவன்ஷி டி20 சர்வதேச போட்டியில் 8 ஆட்டத்தில் விளையாடி 246 ரன்கள் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக 81 ரன் எடுத்துள்ளார். கடைசியாக ஆசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி 15 ரன்கள் எடுத்தார்.

SCROLL FOR NEXT