தென்ஆப்பிரிக்கா- வங்கதேசம் டெஸ்ட்
கிரிக்கெட்

கடும் நெருக்கடி கொடுத்த வங்கதேச பவுலர்கள்: 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 386/7

வங்கதேச பந்து வீச்சாளர் ஹசன் மக்முது 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

தென்ஆப்பிரிக்கா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்தது.

ரபாடா 5 விக்கெட்

அந்த அணியின் தவ்ஹித் ஹிரிடோய் 137 ரன்களும் லிட்டன் தாஸ் 120 ரன்களும் அடித்தனர். தென்ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளும், டேன் பேட்டர்சன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினாலும் வங்கதேச அணியை 400 ரன்கள் எடுக்க விட்டுவிட்டனர்.

ஆக்கர்மேன் 157 ரன்கள், ஹசன் மக்முது 4 விக்கெட்

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹசன் மக்மூத் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மார்க்கிராமை 4 ரன்களிலும் பிரீட்ஸ்கீயை 2 ரன்னிலும் வெளியேற்றினார். என்றாலும் மார்கஸ் ஆக்கர்மேன் 157 விளாசினார். இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

டெம்பா பவுமா ரிட்டையர்டு ஹர்ட்

டெம்பா பவுமா 19 ரன்களுடனும், ரியான் ரிக்கெல்டன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிக்கெல்டன் நிலைத்து நின்று விளையாடினார். பவுமா 49 ரன்கள் எடுத்திருக்கும்போது ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

அதன்பின் வந்த வியான் முல்டர் ரன்ஏதும் எடுக்காமலும், மார்கோ யான்சன் 8 ரன்களிலும், ஹார்மன் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ரிக்கெல்டன் அரைசதம் அடித்தார்.

3-வது நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் மழை விட்டுவிட்டு பெய்ததால் மேற்கொண்டு ஆட்டம் தொடங்காமல் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. ரிக்கெல்டன் 56 ரன்களுடனும், ரபாடா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளைய ஆட்டத்தின்போது தென்ஆப்பிரிக்காவை 400 ரன்களுக்குள் சுருட்டி, வங்கதேசம் 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் போட்டி பரபரப்பானதாக இருக்கும். ஹசன் மகமுது 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT