சேலம் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி 15 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 239 ரன்கள் குவித்துள்ளது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பர்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரண்மாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் வி.கே.வினீத் 20 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் சிங் 15 பந்தில் 38 ரன் குவித்து அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த பாபா இந்திரஜித்-ஹன்னி சைனி ஜோடி சூறாவளியாய் சுழன்றடித்தது. பாபா இந்திரஜித் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 21 பந்தில் 70 ரன்கள் குவித்தது.
பாபா இந்திரஜித் 25 பந்தில் 8 சிக்சர், 3 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களைக் குவித்தது.
சேலம் அணி சார்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.