திருப்பூருக்கு எதிரான போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வென்ற சேலம் அணி நடப்பு தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூபதிகுமார் 27 ரன்னிலும், அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 75 ரன்கள் குவித்தார்.
அமித் சாத்விக், முகமது அலி ஆகியோர் இரட்டை இலக்கங்களை எட்டினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சேலம் சார்பில் ரஹில் ஷா 3 விக்கெட்டும், பொய்யாமொழி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சேலம் ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
திருப்பூர் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
அடுத்து நடைபெறும் கோவை-மதுரை இடையிலான ஆட்டத்தில் மதுரை அணி மோசமாக தோற்றால் திருப்பூர் அணிக்கு பிளே ஆப் சுற்று செல்ல வாய்ப்புள்ளது.
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.