டெஸ்ட் கிரிக்கெட் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வடிவம் என்றும், அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது மிக அதிக அளவிலான பதற்றத்தை தான் உணர்வதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளின் போது தனக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நள்ளிரவு உணவுப் பழக்கம் குறித்து மனம் திறந்து பேசினார்.
செய்தியாளர்களிடம் ரோகித் சர்மா பேசியதாவது: "நான் பொய் சொல்ல விரும்பவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் என்பதால், அந்தப் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் எனக்குள் கடுமையான பதற்றம் இருக்கும். அந்தப் பதற்றம் மற்றும் சிந்தனை காரணமாக எனக்கு இரவில் சரியாகத் தூக்கம் வராது.
அவ்வாறு தூக்கமின்றி நள்ளிரவில் விழித்திருக்கும்போது எனக்குப் பசி எடுக்கும். அந்தச் சமயங்களில், எனது அம்மா எனக்காகப் பிரத்யேகமாகச் செய்து கொடுத்த நேந்திரம்பழ சிப்ஸ்களை சாப்பிட்டுப் பதற்றத்தைக் குறைத்துக் கொள்வேன்."என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த ரோகித் சர்மா, 2013 முதல் 2024 வரையிலான தனது டெஸ்ட் பயணத்தில் 67 போட்டிகளில் 4,301 ரன்கள் குவித்து, 12 சதங்கள், 18 அரைசதங்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 212 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் விளையாட உள்ளார்
இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 27-ந்தேதியும், 2-வது போட்டி 30-ந்தேதி கவுகாத்தியிலும், 3-வது போட்டி அக்டோபர் 3-ந்தேதி நியூ சண்டிகரிலும் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகின்றன.
உள்நாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கவுள்ள இந்த ஒருநாள் தொடரில், ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் மீண்டும் களம் காண்பதால் கிரிக்கெட் வட்டாரத்தில் சுவாரசியம் அதிகரித்துள்ளது.