கிரிக்கெட்

IPL 2026 | லக்னோ அணிக்கு எதிரான போட்டி... எம்.எஸ். தோனியின் 15 ஆண்டு கால சாதனையை முறியடித்த ரிங்கு சிங்

சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி போட்டியை முடித்தார் ரிங்கு சிங்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. பரபரப்பாக நடந்த போட்டியில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் வெற்றியை தன்வசமாக்கியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரிங்கு சிங் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மேலும், சுனில் நரைனுடன் இவரது பார்ட்னர்ஷிப் காரணமாக கொல்கத்தா அணியின் ஸ்கோர் அதிகரித்தது. இந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரிங்கு சிங் 51 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதன் மூலம் அவர் எம்.எஸ். தோனியின் 15 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் 6-ஆவது பேட்டராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரிங்கு சிங் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் அடித்த 83 ரன்கள் ஐ.பி.எல். போட்டியில் 6-வது வீரர் அடித்த அதிபட்ச ஸ்கோராக மாறியது. முன்னதாக எம்.எஸ். தோனி 2011-ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 70 ரன்களை அடித்தது சாதனையாக இருந்தது.

நேற்றைய போட்டியில் பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சின் போதும் ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக 5 கேட்ச்களை பிடித்து அசத்தினார். பேட்டிங் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டார். பிறகு நடந்த சூப்பர் ஒவரிலும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை தேடிக்கொடுத்தார்.