ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியை மார்ச் 31-க்குள் விற்க தற்போதைய உரிமையாளரான டையாஜியோ திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் தங்களுக்கு முக்கிய வணிகம் அல்லாததால், அணியை விற்க முடிவு செய்துள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் அணிகள் இரண்டும் இந்த விற்பனையில் அடங்கும்.
ஐபிஎல் தொடரின் மிகவும் மதிப்புமிக்க அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் ஐபிஎல் கோப்பையை வென்றது மற்றும் மகளிர் பிரீமியர் லீக் (WPL) கோப்பையையும் தன்வசம் வைத்திருப்பது என ஆர்சிபியின் பிராண்ட் மதிப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.
அதனால் ஆர்சிபி அணி சுமார் ரூ. 18,488 கோடி மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த விற்பனை இறுதி கட்டத்தில் உள்ளது. மார்ச் 31, 2026-க்குள் இந்த விற்பனை செயல்முறையை முடிக்க டையாஜியோ திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது இரண்டு முக்கிய முதலீட்டாளர்கள் இறுதிப் போட்டியில் உள்ளனர்.
அதன்படி ஸ்வீடனைச் சேர்ந்த EQT குரூப் மற்றும் ரஞ்சன் பாய் தலைமையிலான கூட்டமைப்பு ஆகியவை வாங்குவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளன.
மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள் (கிளேசர் குடும்பம்) மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் இந்த ஏலப்போட்டியில் இருந்து விலகியதாகத் தெரிகிறது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஈக்யூடி (EQT) தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம், சுமார் 2 பில்லியன் டாலர் வரை ஏலம் கோரி முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மணிப்பால் குழுமத்தின் ரஞ்சன் பாய், உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களான கேகேஆர் மற்றும் டெமாசெக் (Temasek) ஆகியவற்றுடன் இணைந்து ஆர்சிபியை வாங்கத் தீவிரமாக முயன்று வருகிறார்.
2021-ல் லக்னோ அணி 850 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஆர்சிபி அதைவிட இரண்டு மடங்கு அதிக விலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆர்சிபி அணியின் புதிய உரிமையாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.