பாபா இந்திரஜித்
கிரிக்கெட்

ரஞ்சி டிராபி: சேப்பாக்கத்தில் 165 ரன்களில் சுருண்டு தமிழ்நாடு அணி பரிதாபம்..!

பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 59 ரன்கள் அடித்தார்.

2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. 18-ந்தேதி தொடங்கிய உத்தரகாண்ட் அணிக்கெதிரான 2-வது போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 3-வது போட்டி நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு ரெயில்வேஸ் அணியை எதிர்கொண்டது.

தமிழ்நாடு பந்து வீச்சு தேர்வு

இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரெயில்வேஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சோனு யாதவ் சிறப்பாக பந்து வீச தொடக்க வீரர் சஹாப் யுவ்ராஜ் சிங் (4), எஷான் கோயல் (0), முகமது சைஃப் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சாய் கிஷோர், சோனு யாதவ் அபாரம்

சாய் கிஷோர் பந்தில் விவேக் சிங் (14), ராஜ் சவுத்ரி (7) ஆகியோர் வெளியேறினர். ஜுபைர் அலி மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடிக்க ரெயில்வேஸ் அணி 53.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 184 ரன்களில் சுருண்டது. தமிழ்நாடு அணி சார்பில் சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பாபா இந்திரஜித் அரைசதம்

பின்னர் தமிழ்நாடு நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும், அந்த்ரே சித்தார்த் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

165 ரன்களில் சுருண்ட தமிழ்நாடு

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபா இந்திரஜித் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 165 ரன்களில் சுருண்டது. ரெயில்வேஸ் 184 ரன்கள் அடித்த நிலையில், தமிழ்நாடு அணியால் 165 ரன்களே அடிக்க முடிந்தது.

19 ரன்கள் முன்னிலையுடன் ரெயில்வேஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் சஹாப் யுவராஜ் சிங் நிலைத்து நின்று விளையாட, அடுத்து வந்த 4 வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவி சிங் 19 ரன்களில் வெளியேறினார்.

ரெயில்வேஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT