சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணியை 5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்தூரில் இன்று நடந்த போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரமண் தீப் சிங் 36 ரன்னும், சன்வீர் சிங் 34 ரன்னும் எடுத்தனர்.
தமிழ்நாடு சார்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டும், சிலம்பரசன், ராஜ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாலசுப்பிரமணியன் சச்சின் அரைசதம் கடந்து 42 பந்தில் 70 ரன்கள் குவித்தார். ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
இறுதியில், தமிழ்நாடு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பில் கார்த்திக் சதா 3 விக்கெட்டும், சுக்தீப் பஜ்வா, கிருஷ் பகத் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது கார்த்திக் சதாவுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தமிழக அணி தொடர்ந்து 3வது தோல்வியைச் சந்தித்துள்ளது.