இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. இந்தியாவுக்கு 2 ஐ.சி.சி. கோப்பையை வென்று கொடுத்த அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடி வருகிறார்.
ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் முடிவுக்கு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டியிலும் அவரது ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. முதல் ஆட்டத்தில் 11 ரன்னும், நேற்று நடந்த 2-வது போட்டியில் 26 ரன்னும் எடுத்தார்.
இதற்கிடையே, 2027 உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கும் வகையில் இனி வரும் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது. இதை அவரிடம் தேர்வுக்குழு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியது.
எனவே, இங்கிலாந்துக்கு எதிரான 3- வது ஒருநாள் போட்டி ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்திவ் படேல் கூறியதாவது:
லார்ட்ஸ் ஒருநாள் போட்டிதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியாக இருக்குமானால், ரோகித் சர்மா ஒரு சதம் அடித்து விடைபெற விரும்புவார். அதைச் செய்வதற்கு அவருக்கு முழு தகுதியும் உண்டு.
அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இதை நாம் பார்த்திருக்கிறோம். இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்த பிறகு, அடுத்த இன்னிங்சிலேயே ஆட்டத்தை வெல்லும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் மீண்டு வருவார்.
விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் உள்ள வித்தியாசம் எப்போதுமே நிலைத்தன்மைதான்.
ரோகித் ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன்கள் எடுக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு எடுக்கும்போது, ஒரு சிறப்பான இன்னிங்சை விளையாடி, பெரும்பாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றுவிடுவார். இந்தப் போட்டியில் அவர் சௌகரியமாக விளையாடவில்லை.
தன்னை விமர்சிப்பவர்களின் வாயை அடைப்பதற்கு இது அவருக்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பு. இது இதற்கு முன்பும் பலமுறை நிகழ்ந்துள்ளது, அவர் எப்போதும் தனது பேட்டிங்கால் பதிலடி கொடுத்துள்ளார். எனவே, லார்ட்ஸ் ஒருநாள் போட்டிதான் அவரது கடைசிப் போட்டியாக இருக்குமானால், மக்கள் நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும் ஒரு இன்னிங்சை அவர் விளையாடுவார் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.