பாகிஸ்தான் அணி
கிரிக்கெட்

98-ல் சுருண்ட இலங்கை: முதல்நாள் முடிவில் 121/3 என வலுவான நிலையில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தொடக்க ஜோடி 80 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

98 ரன்களில் சுருண்ட இலங்கை

அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர். முதல் ஐந்து வீரர்கள் லஹிரு உதாரா(4), சூர்யபந்த்ரா (2), தினேஷ் சண்டிமல் (7), கமிந்து மெண்டிஸ் (8), தனஞ்ஜெயா டி சில்வா (1) ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா ஓரவிற்கு தாக்குப்பிடித்தனர். மெண்டிஸ் 32 ரன்களிலும், தினுஷா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்தவர்களும் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை 35.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 98 ரன்களில் சுருண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ், ரசாயுல்லா, ஆமிர் ஜமால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பாகிஸ்தானுக்கு சிறப்பான தொடக்கம்

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அசான் அவைஸ்- தையப் ஆரிஃப் ஜோடி நிலைத்து நின்று விளையாடியது.

80 ரன்கள் எடுத்திருக்கும்போது பாகிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. ஆரிஃப் 46 ரன்கள் எடுத்து அட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது தஹா, பாபர் அசாம் ஆகியோர் தலா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அசான் அவைஸ் 47 நாட்-அவுட்

4-வது விக்கெட்டுக்கு அசான் அவைஸ் உடன் சகிப் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.

அசான் அவைஸ் 47 ரன்களுடனும், சகிப் கான் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது பாகிஸ்தான் 23 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை விளையாடினால் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT