ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1 -1 என வென்று தொடரில் சமனிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரில் மேத்யூ ஷார்ட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். லபுசேன், அலெக்ஸ் கேரி தலா 19 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் இங்கிலீஷ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோஷ் இங்கிலீஸ்-அலெக்ஸ் கேரி ஜோடி 52 ரன்களை சேர்த்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விரைவில் வெளியேறினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 42 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஷதாப் கான், அப்ரார் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.