கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் கடைசி இடத்தில் பாகிஸ்தான் - முக்கிய பொறுப்பை ஏற்கும் சோயப் அக்தர்

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி கலந்து கொண்டு சமீபத்தில் வைட் வாஷ் ஆகியிருந்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பொறுப்பில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி கலந்து கொண்டு சமீபத்தில் விளையாடியது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து வைட்வாஷ் ஆனது.

தரவரிசையில் கடைசி இடம்

இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருந்தது.

இதன்மூலம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசி (ஒன்பதாவது) இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரையில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருடன் சந்திப்பு

இதன்காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வியை, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பொறுப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஷேன் மெக்டெர்மாட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளரான ஆஷ்லி நாஃப்கே ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து, சோயப் அக்தர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்களையும் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் 2027ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறுமா என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கவலை தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT