இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 98 ரன்களுக்கு சுருண்டது. 6வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ், ரசாவுல்லா, அமீர் ஜமால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காஜி கோரி அரை சதம் கடந்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அசான் அவைஸ் 47 ரன்னில் அவுட்டானார். தயீப் ஆரிப் 46 ரன் எடுத்தார். ரசாவுல்லா 42 ரன்னில் வெளியேறினார்.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 5 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 227 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 4வது விக்கெட்டுக்கு இணைந்த பசிந்து சூர்யபந்தரா-தனஞ்செய டி சில்வா ஜோடி 60 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா, மிலன் ரத்நாயகே ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். குசால் மெண்டிஸ் 53 ரன்னும், சோனல் தினுஷா 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. மிலன் ரத்நாயகே 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இலங்கை 316 ரன்களில் ஆல் அவுட்டானது. மிலன் ரத்நாயகே 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால், மொகமது அப்பாஸ் தலா 3 விக்கெட்டும், ரசாவுல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 90 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை மொகமது அப்பாஸ் பெற்றார்.