கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

பாகிஸ்தானின் ரிஸ்வானுல்லா 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

பாகிஸ்தான் அணி தான் ஆடிய 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் - வங்கதேசம் மோதல்

இந்நிலையில், இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 31.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா அல் முஹி அரை சதமடித்து அவுட்டானார்.

ரிஸ்வானுல்லா 5 விக்கெட்

பாகிஸ்தான் சார்பில் ரிஸ்வானுல்லா 5 விக்கெட்டும், மொஹமது சய்யாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கான், ஹயாம் கான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ஹயாம் கான் 69 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், பாகிஸ்தான் 21.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. உஸ்மான் கான் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT