கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தானின் அராபத் மினாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவரில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். மேட் ரென்ஷா நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் வெளியேறினார்.

பாகிஸ்தான் சார்பில் அராபத் மினாஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார அகமது 2 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராப், சல்மான் ஆகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம், காஜி கோரி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது.

பாபர் அசாம் 69 ரன்னும், காஜி கோஇ 65 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் 42.3 ஓவரில் 205 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.