கிரிக்கெட்

3-வது போட்டியில் வெற்றி... ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் சூழல் நிலவியது.

மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மேத்யூ ஷார்ட் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கதிய கேப்டன் ஜோஷ் இங்லிஸ் நிதானமாக ஆடினார்.

எனினும், அடுத்தடுத்து வந்தவர்களில் லபுஷேன் மற்றும் அலெக்ஸ் கேரி மட்டும் தலா 19 ரன்களை அடிக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் களமிறங்கிய ஆடம் ஜாம்பா மட்டும் 10 ரன்களை எடுத்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் நிதானமாக ஆடிய ஜோஷ் இங்லிஸ் 71 பந்துகளில் 65 ரன்களை அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது மற்றும் ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரௌப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு மாஸ் சதாகத் மற்றும் பாபர் அசாம் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 27 மற்றும் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் அப்துல் சமாத் மற்றும் ஷதாப் கான் முறையே 18 மற்றும் 29 ரன்களை அடிக்க பாகிஸ்தான் அணி 41.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.