கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்

வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 413 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஷாண்டோ சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 33 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஆசான் அவைஸ் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். அப்துல்லா பசல் 60 ரன்னும், மொகமது ரிஸ்வான் 59 ரன்னும், சல்மான் ஆகா 58 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தஜ்ஜுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.