கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்

இலங்கையின் லஹிரு குமார 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இலங்கை திணறல்

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இலங்கை வீரர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. அந்த அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

98 ரன்னுக்கு ஆல் அவுட்

6வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா ஜோடி 49 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் 32 ரன்னிலும், சோனல் தினுஷா 21 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 98 ரன்களுக்கு சுருண்டது.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ், ரசாவுல்லா, அமீர் ஜமால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அசான் அவைஸ் 47 ரன்களுடனும், சகிப் கான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. அசான் அவைஸ் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.

காஜி கோரி அரை சதம்

9வது விக்கெட்டுக்கு இணைந்த காஜி கோரி-ரசாவுல்லா ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.

காஜி கோரி அரை சதம் கடந்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார். ரசாவுல்லா 42 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 5 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT