வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றிபெற 233 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேசம் ஏ அணி.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்கதேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா 'ஏ', நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம்பிடித்தன.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடந்து வரும் 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசம் ஏ, பாகிஸ்தான் ஏ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேசம் ஏ அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த ஷஹாதத் ஹொசைன் தீபு-மஹிதுல் இஸ்லாம் அங்கோன் ஜோடி 95 ரன்கள் சேர்த்தது.
பொறுப்புடன் ஆடிய ஷஹாதத் ஹொசைன் தீபு சதமடித்து அசத்தினார். மஹிதுல் இஸ்லாம் அங்கோன் 42 ரன் எடுத்தார். எஸ்.எம்.மெஹ்ரூப் 28 ரன் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் ஏ அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. ஷஹாதத் ஹொசைன் தீபு 103 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 234 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.