கிரிக்கெட்

2வது டெஸ்ட்: அப்துல்லா ஷபிக் சதத்தால் இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 266/2

பாகிஸ்தானின் அப்துல்லா ஷபிக்-பாபர் அசாம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 344 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடக்க வீரர் பிராண்டன் கிங் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 73 ரன்னும், ராஸ்டன் சேஸ் 70 ரன்னும் எடுத்தனர்.

சஜித் கான் 4 விக்கெட்

பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 4 விக்கெட்டும், முகமது அலி, உபைத் ஷா, அலி உஸ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 34 ஆக இருந்தபோது இமாம் உல்-ஹக் 14 ரன்னில் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் ஆசான் அவிஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய பாபர் அசாம், அப்துல்லா ஷபிக்குடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அப்துல்லா ஷபிக் சதம்

சிறப்பாக ஆடிய அப்துல்லா ஷபிக் சதமடித்து அசத்தினார். பாபர் அசாம் அரை சதம் கடந்தார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 66 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 107 ரன்னும், பாபர் அசாம் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி இன்னும் 78 ரன்கள் பின்தங்கியுள்ளது.