நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். டாம் பிளெண்டல் அரை சதம் கடந்து 51 ரன்னில் வெளியேறினார். டேரில் மிட்செல் 44 ரன்னும், கைல் ஜேமிசன் 41 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், மேத்யூ பிஷர், சோனி பேக்கர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. துவக்க வீரர்களான பென் டக்கெட் (36 ரன்கள்) மற்றும் எமிலியோ கே (53 ரன்கள்) ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜேக்கப் பெத்தெல் 9 ரன்னுக்கு நடையை கட்ட கேப்டன் ஜோ ரூட் 46 ரன்களிலும், ஹேரி ப்ரூக் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை சேர்த்தது. 3-ஆம் நாள் ஆட்டத்தை 169 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ரூர்கி 2 விக்கெட்டும், கைல் ஜேமிசன் மற்றும் நேதன் ஸ்மித் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 2-ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான கேப்டன் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே முறையே 4 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். இவருடன் ஆடிய ரச்சின் ரவீந்திரா அரை சதம் கடந்த நிலையில், 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2-ஆவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை குவித்து 352 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் மற்றும் ஜேக்கப் பெத்தெல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.