கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிவேக சதம்: நிகோலஸ் பூரன் சாதனை

டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

நியூயார்க் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் 31 பந்தில் சதம் விளாசி, மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்து தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்று போட்டியில் வாஷிங்டன் பிரீடம் அணி, மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களைக் குவித்தது.

குயின்டன் டி காக் 2 பவுண்டரிகள், 6 சிக்சர் உள்பட 51 ரன் குவித்து ஆட்டமிழ்ந்தார்.

சிக்சர் மழை பொழிந்த நிகோலஸ் பூரன் 31 பந்தில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். 13 சிக்சர், 5 பவுண்டரி அடித்த பூரன் 106 ரன்னில் அவுட்டானார். அடுத்து அதிரடியாக ஆடிய பொல்லார்டு 64 ரன் குவித்தார்.

வாஷிங்டன் பிரீடம் அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் பிரீடம் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 கிரிக்கெட்டில் மிகப் பெரிய ரன் சேசிங் சாதனையைப் படைத்தது.

3வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித், ஆண்ட்ரிஸ் கவுஸ் ஜோடி 241 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். ஆண்ட்ரிஸ் கவுஸ் 12 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 132 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 9 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 110 ரன்கள் குவித்தனர்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் நியூயார்க் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் வெறும் 31 பந்தில் சதம் விளாசி, மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இத்தொடரில் பின் ஆலன் 34 பந்தில் சதமடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.