கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 79 ரன் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து

அயர்லாந்து 2வது இன்னிங்சில் 232 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

அயர்லாந்து, நியூசிலாந்து இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெல்பாஸ்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 490 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. டாம் பிளெண்டெல் 186 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 121 ரன்னிலும், பாக்ஸ்கிராப்ட் 98 ரன்னிலும் அவுட்டாகினர்.

அயர்லாந்து சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 7வது விக்கெட்டுக்கு ஆண்டி மெக் பெரின்-மார்க் அடைர் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. மார்க் அடைர் 40 ரன்னில் அவுட்டானார். மெக் பெரின் 73 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டும், பென் சீயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் டோஹெனி 57 ரன்னும், லார்கன் டக்கர் 50 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

கடைசி கட்டத்தில் மார்க் அடைர் தனியாகப் போராடினார். அவர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் பிளேர் டிரிக்னர் 5 விக்கெட்டும், நாதன் ஸ்மித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.