நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹென்றி நிகோலஸ் 68 ரன்னும், டீன் பாக்ஸ்கிராப்ட் 59 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் 57 ரன் எடுத்தார். லிட்டன் தாஸ் 46 ரன்னில் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு சைப் ஹசன், லிட்டன் தாஸ் ஜோடி 93 ரன்கள் சேர்த்தது. தவ்ஹித் ஹிருடோய் ஓரளவு போராடினார். அவர் அரை சதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வங்கதேசம் 48.3 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம்26 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
நியூசிலாந்தின் பிளைய்ர் டிக்னர் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது டீன் பாக்ஸ்கிராப்டுக்கு அளிக்கப்பட்டது.