கோவை அணிக்கு எதிரான போட்டியில் நெல்லை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.
அதிரடியாக ஆடிய பாலசுப்பிரமணியன் 42 ரன்னிலும், கேப்டன் ஷாருக் கான் 29 ரன்னிலும் அவுட்டாகினர். சுரேஷ் லோகேஷ்வர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் லோகேஷ்வர்-பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி 59 ரன்கள் சேர்த்தது.
நெல்லை அணி சார்பில் யுதீஸ்வரன் 3 விக்கெட்டும், இம்மானுவல் செரியன், சச்சின் ராதி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை கிங்ஸ் அணி களமிறங்கியது. கோவை வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் நெல்லை அணியினர் ரன் எடுப்பதில் சிரமப்பட்டனர். சீரான இடைவெளியில் விக்கெட்களும் விழுந்தன.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரித்திக் ஈஸ்வரன் அதிரடியாக ஆடினார். அவர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அரை சதம் கடந்த அவர் 31 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 69 ரன்களைக் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார்.
இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
கோவை அணி சார்பில் தீபன் லிங்கேஷ், கிஷோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் நெல்லை அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். நெல்லை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது.