சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் முஷீர் கான் அதிரடியில் உத்தரகாண்ட் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் இன்று நடந்த லீக் போட்டியில் மும்பை, உத்தரகாண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற உத்தரகாண்ட் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் முஷீர் கான் 40 பந்தில் 65 ரன்னும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 51 ரன்னும் விளாசினர். அதிரடியாக ஆடிய ஹர்திக் தாமோர் 14 பந்தில் 39 ரன் குவித்தார்.
உத்தரகாண்ட் சார்பில் ரவிந்தர் நேகி, ஜகதீஷ சுஷித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 210 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய உத்தரகாண்ட் அணி 16.5 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷஷ்வாத் தங்வால் 20 பந்தில் 37 ரன் எடுத்தார்.
மும்பை அணி சார்பில் அதர்வா அங்கோலேகர் 3 விக்கெட்டும், மெக்ஸ்வெல் சுவாமிநாதன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் மும்பை அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்தது.