இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரராக தனது ஓய்வை அறிவித்த சில மணிநேரங்களுக்கு பிறகு, முன்னாள் இந்திய கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) ஜாம்பவனான எம்.எஸ். தோனி இன்று (நவ. 17) சமூக வலைதளங்களில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை பகிர்ந்தார்.
அவரது கிரிக்கெட் பயணத்தின் பல மறக்க முடியாத தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ, ரசிகர்களை அவரது விளையாட்டு வாழ்க்கை பயணத்தின் வழியாக ஒரு ஏக்க பயணத்திற்கு அழைத்து செல்கிறது.
ஐ.பி.எல். 2027 முதல் அவர் அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்பார் என்றும், இதன் மூலம் அந்த தொடரில் ஒரு வீரராக அவரது 19 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வரும் என்றும் சி.எஸ்.கே. உறுதிப்படுத்திய சிறிது நேரத்திலேயே தோனியின் இந்த பதிவு வெளியானது.
இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்த தோனி, 1976-ஆம் ஆண்டு வெளியான 'கபி கபி' திரைப்படத்தின் புகழ்பெற்ற 'மெயின் ஹர் ஏக் பல் கா ஷாயர் ஹூன்' பாடலை பயன்படுத்தினார். இந்திய கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல்.-இல் அவரது பயணத்தின் காட்சிகளை கொண்ட அந்த காணொளிக்கு, இந்த பாடல் ஒரு உணர்ச்சிப்பூர்வமான தொடுதலை சேர்த்தது.
பல ஆண்டுகளாக ரசிகர்களிடம் இருந்து தனக்கு கிடைத்த அன்பு மற்றும் ஆதரவை அங்கீகரிக்கும் வகையில், தோனி அந்த வீடியோவுடன் ஒரு சிறப்பு செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் நான் சொன்னது தவறு என நிரூபித்துவிட்டனர், அதை ஏற்றுக்கொள்வதற்கு இதைவிட சிறந்த பாடல் இல்லை. ஒருவேளை, நான் அந்த தவறை செய்துவிட்டு பிறகு அதை ஏற்றுக்கொள்வதற்காகவே இரண்டு பதிப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்," என்று அவர் எழுதியிருந்தார்.
இந்த பாடல் தேர்வானது, 2020 ஆகஸ்டில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கும் ஒரு தொடர்பை கொண்டுள்ளது. அப்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, 'மெயின் பல் தோ பல் கா ஷாயர் ஹூன்' என்ற அதே பாடலின் மற்றொரு பதிப்பை அவர் பயன்படுத்தியிருந்தார்.
முன்னதாக செவ்வாயன்று, 2027 சீசனில் இருந்து தோனி அணியின் ஆலோசகராக தனது பயணத்தை தொடர்வார் என்று சி.எஸ்.கே. உறுதிப்படுத்தியது. இந்த அறிவிப்பு ஐ.பி.எல்.-இல் அவரது விளையாட்டு வாழ்க்கையின் முடிவை குறித்தது.
இந்த தொடரின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி திகழ்கிறார். அவரது தலைமையில், சி.எஸ்.கே. ஐந்து ஐ.பி.எல். பட்டங்களை வென்று, போட்டியின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக தங்களை நிலைநிறுத்தி கொண்டது.