ஐ.பி.எல். 2026 பிளேஆஃப் சுற்று போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.
இதன் மூலம், இந்த சீசனில் எம்.எஸ். தோனியை மீண்டும் சி.எஸ்.கே. அணிக்காக காணும் வாய்ப்பும் முடிவுக்கு வந்தது. கால் தசைப்பிடிப்பு மற்றும் கட்டைவிரல் காயம் காரணமாக இந்த சீசனில் எம்.எஸ். தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சி.எஸ்.கே. டிரெசிங் ரூமில் இருந்தார். மேலும் இறுதி போட்டிக்கு முன்பே வீடு திரும்பினார். 44 வயதான, எம்.எஸ். தோனி ஒரு வீரராக தனது உச்சத்தை கடந்துவிட்ட போதிலும், அவரது ஆளுமை இன்னும் நிலைத்திருக்கிறது.
அடுத்த ஐ.பி.எல். தொடரின்போது தோனிக்கு 45 வயதாகியிருக்கும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்குப் பிறகு, அடுத்த ஆண்டு எம்.எஸ். தோனியை களத்தில் நாம் பார்ப்போமா? என்று ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேள்வி கேட்கப்பட்டது
இதற்கு பதிலளித்த ருதுராஜ் கெய்க்வாட், "நிச்சயமாக அடுத்த ஆண்டே உங்களுக்கு அது தெரிய வரும். எனக்கும் அடுத்த ஆண்டே அது தெரிய வரும். வெளிப்படையாக, அவர் இல்லாதது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு. அவர் எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர், குறிப்பாக கடைசி ஓவர்களில் களமிறங்கும்போது. களத்தில் இருப்பதன் மூலமே அவரால் ஆட்டத்தையே மாற்ற முடியும், ஆட்டத்தின் போக்கையே மாற்ற முடியும்.
எனவே, இந்த சீசனில் நாங்கள் அவரை மிகவும் மிஸ் செய்தோம். ஆனால், அடுத்த சீசனை பற்றி எனக்கு தெரியாது. இருப்பினும், எங்களிடம் இருந்த வீரர்களை கொண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த ஆண்டு அவர்கள் பெற்ற அனுபவத்தை கண்டும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று தெரிவித்தார்.