2008-ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி, எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். வயது மூப்பு மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று சீசன்களில் இது தொடர்பான கேள்வி எழுந்து கொண்டே வருகிறது.
கடந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார். 2027 சீசனில் விளையாடுவது குறித்து எம்.எஸ். தோனிதான் முடிவு செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற சுகாதார நிகழ்ச்சி ஒன்றில் எம்.எஸ். தோனி கலந்து கொண்டார். அப்போது எம்.எஸ். தோனி கூறியதாவது:-
டாக்டர், நான் அந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். நீங்கள் எனக்கு அதன் அறிக்கையைத் தர வேண்டும். டிசம்பர் மாதத்திற்கு முன்பாக, என்னால் இன்னும் ஒரு சீசன் விளையாட முடியுமா, அதற்கான உடல் வலிமை என்னிடம் இருக்கிறதா என்பதை நான் பார்க்க வேண்டும்.
ஒருவேளை முடியாவிட்டால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் அனைத்தையும் சரியாகச் செய்ய வேண்டும்; இந்த பழைய வாகனத்தை (வயதாகிவிட்டது இவ்வாறு தெரிவிக்கிறார்) மீண்டும் சாலையில் சிறப்பாக ஓடக்கூடிய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். எனவே, அந்தப் பொறுப்பு முழுமையாக உங்கள் மீதுதான் உள்ளது.
இவ்வாறு எம்.எஸ். தோனி தெரிவித்தார்.
இதனால் டிசம்பர் மாதத்திற்குள் உடற்தகுதி பெற்றுவிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு உள்ளது.