கேப்டன் கூல் என அழைக்கப்படும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக இருந்ததில் இருந்து இந்தியாவில் அதிக கோப்பைகளை பெற்ற கிரிக்கெட் வீரராக உயர்ந்தது வரை தோனியின் பயணம் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது.
2004இல் முதன் முதலில் சர்வதேச போட்டியில் அறிமுகமான தோனி முதலில் தனது பேட்டிங் திறமைக்காக அறியப்பட்ட நிலையில் பிற்காலத்தில் ஒரு தலைவனாக அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தும் அவரது தலைமைத்துவத்துக்காக பாராட்டப்பட்டார்.
2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றில் இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தினார் தோனி.
இந்தியாவுக்காக டெஸ்ட், ஓடிஐ, மற்றும் டி20 ஆகிய மூன்று சர்வதேச வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 538 போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். இவற்றில் மொத்தம் 17,266 ரன்கள் எடுத்துள்ளார். 829 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அணியை வழிநடத்துவதை தவிர்த்து பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் தோனி தேர்ந்தவர் ஆவார். அவரின் டேக்டிஸ்கள் இன்றளவும் பல கிரிக்கெட் வீரர்களுக்கு படிப்பினையாக உள்ளது.
350 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் (ஓடிஐகளில்) மட்டுமே தோனி 10,773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10 சதங்களும், 73 அரை சதங்களும் அடங்கும். குறிப்பாக ஒரு ஓடிஐ போட்டியில் அவர் எடுத்த 183 ரன்கள் இதுவரை தகர்க்கப்படாத சாதனை ஆகும். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர்களில் 6வது இடத்தில் தோனி உள்ளார். ஓடிஐகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 18,426 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.
ஓடிஐகளில் தோனியை தனித்துவமாக காட்டுவது என்னவென்றால் அவர் பிரதானமாக மிடில் ஆடரில் விளையாடி 10,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது தான். அவருக்கு குறைந்த ஓவர்களே பேட்டிங் செய்ய இருந்தபோதும் இந்த போட்டிகளில் 50 ரன்கள் என்ற சராசரியை அவர் மெயின்டெய்ன் செய்து வந்துள்ளார்.
இந்தியாவை 200 ஓடிஐகளில் வழிநடத்திய தோனி அதில் 110 இல் அணியை வெற்றி பெற செய்துள்ளார். 74 போட்டிகளில் மட்டுமே அவரது தலமையில் ஓடிஐயில் இந்திய அணி தொற்றுள்ளது. 5 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. மொத்தமாக அவரின் வெற்றி சதவீதம் 55 ஆக இருந்துள்ளது.
மொத்தம் 98 சர்வதேச டி20 போட்டிகளில் தோனி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். இந்த போட்டிகளில் 126.13 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 37.60 ரன்கள் என்ற சராசரியை மெயின்டெய்ன் செய்து வந்துள்ளார். இந்த 98 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் இரண்டு அரைசதங்களும் அடித்துள்ளார். இவற்றில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் 56 ஆக இருந்துள்ளது.
இவ்வாறு தோனியின் பேட்டிங் அபாரமானதாக இருப்பினும் அவரின் தலைமை தான் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பாராட்டை பெற்றது. 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்தியா தனது முதல் உலகக்கோப்பையை வென்றதற்கு தோனியின் தலைமையே முக்கிய காரணம். அதுவே இந்திய கிரிக்கெட்டிற்கு புதிய சகாப்தத்தை தொடங்கியது.
72 டி20 சர்வதேச தொடர்களில் இந்திய அணியை வழிநடத்திய தோனி, 41 போட்டிகளில் அணியை வெற்றி பெறச் செய்தார். 28 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோற்றது. ஒரு போட்டி டிரா ஆனது. இரண்டு போட்டிகளில் ரிசல்ட் இல்லாமல் முடிந்தது. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வெற்றி சதவீதம் 56.94 ஆக இருந்தது.
டெஸ்ட் போட்டிகளில் தோனியின் லாங் பார்ம் கிரிக்கெட் வாழ்வில் அவர் மொத்தம் 90 மேட்ச்களில் விளையாடியுள்ளார். அதில் அவர் 4,876 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளார். அவரின் ரன்களின் சராசரி 38.09 ஆக இருந்தது. இவற்றில் மொத்தம் 6 சதங்களும், 33 அரை சதங்களும் அடித்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 224 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தோனி 14வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கேப்டனாக 60 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய தோனி 27 போட்டிகளில் அணியை வெற்றி பெற செய்துள்ளார். 18 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோற்றுள்ளது. 15 போட்டிகள் டிராவில் முடிந்தது. ஒட்டுமொத்த வெற்றி சதவீதம் 45 ஆக இருந்தது.
அவரின் தலைமையின் கீழ் தான் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முதலில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிருந்திருந்தது.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்களில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையும் தொனியையே சேரும். 2010-11 மற்றும் 2012-13 தொடர்களில் 4-0 என்ற அளவில் வெற்றிகளை அவர் பதிவு செய்திருந்தார்.