வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் மெக்காய் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்களை எடுத்துள்ளது.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார். அவர் 107 டெஸ்டுகளில் விளையாடி 441 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க், ஸ்டெயின் சாதனையை முறியடித்துள்ளார்.
டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 10-வது இடத்தை ஸ்டார்க் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்த வரிசையில் 441 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 56 டெஸ்ட்களில் 230 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.