டி.என்.பி.எல். தொடரின் 7வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்தது.
டிஎன்பிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 239 ரன்களைக் குவித்தது.
ஆண்ட்ரே சித்தார்த் 42 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பொறுப்புடன் ஆடிய பாலசுப்ரமணியன் அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 84 ரன்னில் ஆட்டமிழந்தார். லோகேஷ்வர் 38 ரன்னில் அவுட்டானார்.
கடைசி நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டும், சரவணன், பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மதுரை அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரர் ராம்குமார் 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் மகாதேவன் 41 ரன்னில் அவுட்டானார்.
என்.எஸ்.சதுர்வேத் ஆரம்பத்தில் மெதுவாக ஆடினார். அதன்பின், ருத்ர தாண்டவம் ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
அதிரடியாக ஆடிய அவர் 47 பந்துகளில் 7 சிக்சர், 15 பவுண்டரிகளை விளாசி 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் பாலச்சந்தர் அனிருத் 19 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 37 ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.