டி.என்.பி.எல். தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4-ம் தேதி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்கியது. கடந்த 15-ம் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது.
2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 18-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.
மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் ஆகியவை முறையே 5 முதல் 8-வது இடம் பிடித்து வெளியேறின.
23-ம் தேதி நடைபெற வேண்டிய குவாலிபயர்-1 (மதுரை-திருச்சி) ஆட்டமும், 24-ம் தேதி நடக்கவேண்டிய எலிமினேட்டர் (கோவை- திருப்பூர்) போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இதனால் மதுரை அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. கோவை குவாலிபயர்-2 போட்டிக்கு முன்னேறியது. திருப்பூர் அணி வெளியேறியது.
நேற்று நடந்த ‘குவாலிபயர்-2’ ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 84 ரன் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை வீழ்த்தி 2- வது அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்தது. இன்று ஓய்வு நாளாகும்.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை (28-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனிருதா தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல். கோப்பையை வெல்லப் போவது மதுரையா, கோவையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை பாந்தர்ஸ் 2- வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்குமுன் அந்த அணி 2018-ல் கோப்பையை கைப்பற்றி இருந்தது. 2-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்தது. இதனால் மதுரை பாந்தர்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
அந்த அணியில் அதிக்-உர்-ரகுமான் (212 ரன்), சதுர்வேத் (209), குர்ஜபனீத் சிங் (8 விக்கெட்), பெரியசாமி, சோயிப் முகமது கான், (தலா 7 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
கோவை கிங்ஸ் 4- வது தடவையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது. இதில் 2022-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து முதல் முறையாக டி.என்.பி.எல் கோப்பையை வென்றது. 2023- ல் 2-வது பட்டத்தைக் கைப்பற்றியது. தற்போது மதுரை அணிக்கு பதிலடி கொடுத்து 3-வது தடவையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
கோவை அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் மதுரையை எதிர்கொள்ளும். 3 ஆட்டத்தில் தோற்று இருந்தது.
கோவை அணியின் பேட்டிங்கில் சச்சின் (389 ரன்), லோகேஷ்வர் (258 ), கேப்டன் ஷாருக் கான் (211) , பந்துவீச்சில் தீபன் லிங்கேஷ் (15 விக்கெட்), சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன் (தலா 13 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்